புதிய சமையல் எரிவாயு இணைப்பு இல்லை!

சனி, 17 மே 2008 (13:31 IST)
புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதில்லை என்றும், ஏற்கனவே உள்ள இணைப்புகளுக்கு கோட்டா முறையில் சிலிண்டரை வழங்குவதென பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெடோரோலியம் ஆகியவற்றின் விற்பனை பிரிவு இயக்குநர்கள் கூட்டாக, நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் ஆலோசனை கடிதத்தை கொடுத்தனர்.

அதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, ரேஷன் கடைகளுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலையில் வழங்குவதால், தினசரி ரூ.550 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. பெட்ரோலிய நிறுவனங்கள் தடையில்லாமல் இயங்குவதற்காக மாதத்திற்கு ரூ.3,500 கோடி கடன் வாங்குகின்றன. மூன்று நிறுவனங்கள் வாங்கிய கடன் ரூ.65 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது. இப்போது ஏற்படும் நஷ்டத்திற்கு மேல், அதிகமாக நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளை கூறியுள்ளோம்.

தற்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.305.90 நஷ்டம் ஏற்படுகிறது. புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதை நிறுத்துவதால், மேலும் நஷ்டம் ஏற்படாமல் தடுக்க முடியும். அத்துடன் ஒரு குடும்பத்திற்கு வழங்கும் சிலிண்டருக்கு கோட்டா நிர்ணயிக்க வேண்டும். புதிய விநியோகஸ்தர்களை நியமிப்பதையும் நிறுத்த வேண்டும்.

அயல்நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து டீசல் போன்றவை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியை நிறுத்த வேண்டும். இந்த வருடம் உள்நாட்டில் டீசல், சமையல் எரிவாயு உற்பத்தி குறைவாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டு உற்பத்தியின் அளவுக்கு ஏற்ப பயன்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், பெட்ரோலிய‌ப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்ல. இதனால் இந்த நிதி ஆண்டில் மூன்று பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் ரூ.2 இலட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்படும் என பெட்ரோலிய நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. சென்ற நிதி ஆண்டில் ரூ.77,304.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்