ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : மின்னஞ்சல் அனுப்பிய உ.பி. பிரமுகர் கைது!
வியாழன், 15 மே 2008 (15:27 IST)
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு தொடர்பான மின்னஞ்சலை அனுப்பிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த இணையதள மைய உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறி இந்தியாவைச் சேர்ந்த 'குரு-அல்-ஹிந்தி' என்ற முஜாகிதீன் இயக்கம் இரண்டு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியது. அந்த மின்னஞ்சலை, ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ராஜஸ்தான் காவல்துறைக்கு அனுப்பி வைத்தது.
அந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மின்னஞ்சல் உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டம் , ஷாகிபாபாத் என்ற இடத்தில் உள்ள இணையதள மையம் ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ஜெய்ப்பூர் காவல்துறையினர், காஸியாபாத் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த இணையதள மையத்திற்கு சென்று, அதன் உரிமையாளர் மதுக்கர் மிஸ்ரா, அவரது மகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஜெய்ப்பூர் காவல்துறையினர் உத்தர பிரதேசம் விரைந்துள்ளனர்.