தகவலறியும் சட்டம்: பொது நல மனு தள்ளுபடி!

வியாழன், 15 மே 2008 (13:01 IST)
நாட்டின் தலைமை நீதிபதி உட்பட நாட்டின் நீதிபதிகள் அனைவரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என்று தொடரப்பட்டிருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கண்ணபிரான் தொடர்ந்த இந்த பொது நல மனுவை விசாரித்த உச்ச ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் குழு இந்த மனு முழுமுழுக்க தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

அதாவது நீதிபதிகளின் சொத்து விவரம் குறித்த வெளியீடு பொது வாழ்வில் அவர்களது நேர்மையை உறுதி செய்வதாய் அமையும் என்றும், அரசியல் சட்டங்களின் அதிகாரியாய் இருப்பதாலேயே நாட்டின் தலைமை நீதிபதி தகவல் அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என்றும் கோரியிருந்தது.

மேலும் நீதித்துறையின் தனித்துவம் என்பது, பொது நலன் கருதி அவர்கள் தெரிவிக்க வேண்டிய தகவல்களை அளிக்காமல் இருப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு தவறான புரிதல்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாக கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்