இந்தியா- பாக். அமைதிப் பேச்சில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம்!
புதன், 14 மே 2008 (19:34 IST)
அமைதிக்கும் பாதிகாப்பிற்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அடுத்தகட்ட அமைதிப் பேச்சில் இவ்விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவது, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்பது அமைதிப் பேச்சின் முக்கிய நிபந்தனையாகும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் அண்மையில் அதிகரித்துள்ள ஊடுருவல்கள், அதற்கெதிராக இந்தியப் படையினர் நடத்தும் தாக்குதல்களில் பலியாகும் உயிர்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் இந்தியா கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், "ஊடுருவல் தொடர்வது ஒரு பிரச்சனைதான். இஸ்லாமாபாத்தில் மே 20 ஆம் தேதி நடக்கவுள்ள அயலுறவுச் செயலர்கள், அயலுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சில் இப்பிரச்சனை எழுப்பப்படும்" என்றார்.
"இந்தியா- பாகிஸ்தான் அமைதிப் பேச்சில் முக்கியக் கூறான அமைதி மற்றும் பாதுகாப்பு என்பதன் கீழ் ஊடுருவல் விவகாரம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவாரத்தை நாங்கள் நிச்சயமாக எழுப்புவோம். அதுபற்றி விவாதிப்போம். அதைச் சரிசெய்வோம்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவது, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாங்கள் கூறுகிறோம். பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த நாங்கள் மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளில் இது ஒரு முக்கியமான நிபந்தனையாகும்" என்றார் அவர்.