ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேரிடம் விசாரணை!
புதன், 14 மே 2008 (13:01 IST)
60க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய 8 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர் குண்டுவெப்பில் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்திற்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ரிக்ஷா ஓட்டுநர் மற்றும் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியின் கைப்பிடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டைக் காவல்துறையினர் கண்டுபிடித்துக் கைப்பற்றிச் செயலிழக்கச் செய்தனர்.
முன்னதாக, ஜெய்ப்பூரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் உள்ள 2 ஹனுமான் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரங்கள் உதவியுடம் கண்டுபிடிக்கப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ப்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராகவேந்திரா சுஹாசா, "குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் இருந்து போதுமான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அவற்றை வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில், இரும்புக் குண்டுகள், குழாய்கள் ஆகியவற்றில் அம்மோனியம் நைட்ரேட் நிரப்பி வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.