உயர் கல்வியில் இட ஒதுக்கீடு: மத்திய அரசிற்குத் தாக்கீது!
திங்கள், 12 மே 2008 (19:41 IST)
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக "பான்- ஐ.ஐ.எம் அலுமினி" என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், "கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்" என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்குத் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.