மத்திய அரசிற்கு ஆதரவு தொடருமா?- மே 23 இல் இடதுசாரிகள் முக்கிய முடிவு!
திங்கள், 12 மே 2008 (18:06 IST)
மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது தொடர்பாக மே 23 ஆம் தேதி இடதுசாரிகள் முக்கிய முடிவெடுக்க உள்ளனர்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செயல்படுத்தும் முயற்சிகள், அதிகரித்து வரும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் தோல்வி ஆகியவை தொடர்பாக மத்திய அரசிற்குக் கண்டனம் தெரிவித்துள்ள இடதுசாரிகள், அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்குவது குறித்து விரைவில் முக்கிய முடிவெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ௦௦௦௦௦௦௦௦பொதுச் செயலர் ஏ.பி.பரதன், "ஆதரவாளர்களின் கருத்துக்களை மதிக்காத அரசிற்கு ஆதரவளிப்பது சரியா என்று இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்களும், பொதுமக்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து நாங்கள் தீவிரமாகச் சிந்தித்து வருகிறோம். வருகிற 23 ஆம் தேதி கூட்டத்தில் மற்ற இடதுசாரிக் கட்சிகளிடமும் எங்கள் கருத்தை முறைப்படி தெரிவிப்போம்" என்றார்.
"விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசின் தோல்வி, அணுசக்தி உடன்பாட்டின் மீது அரசின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக இடதுசாரிகள் விரைவில் சில தீவிர முடிவுகளை எடுக்கவுள்ளனர்" என்றார் அவர்.
அணுசக்தி உடன்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ. - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் ஒன்பதாவது கூட்டம் நடப்பதற்கு ஆறு நாட்கள் முன்னதாக, மே 23 ஆம் தேதி இடதுசாரிகள் கூட்டம் நடக்கிறது. இதில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்று எதர்பார்க்கப்படுகிறது.
ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் மீண்டும் வெறுமனே மிரட்டிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டதற்கு, "அரசிற்கு வெளியில் இருந்து இடதுசாரிகள் அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று, அக்கட்சிகளின் தொண்டர்களும் பொதுமக்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என்றார் பரதன்.