கர்நாடகாவில் முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது!
சனி, 10 மே 2008 (11:04 IST)
கர்நாடகாவில் முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் துவங்கியது.
கர்நாடகாவில் தும்கூர், சிக்கபல்லபூர், கோலார், பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், ராமநகரா, மண்டியா, ஹாசன், குடகு, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் ரிசர்வ் காவலர்கள், மாநிலக் காவலர்கள், துணை ராணுவப் படையினர் உள்பட சுமார் 58,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறை தலைவர் சிறி ராம்குமார் தெரிவித்தார்.
89 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 18,562 வாக்குச் சாவடிகளில் மிகவும் பதற்றம் நிறைந்தவை 6,252 என்றும் பதற்றமானவை 3,500 என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
களத்தில் 952 வேட்பாளர்கள்!
முதல் கட்டத் தேர்தலில் 952 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் தலையெழுத்தை 84 லட்சத்து 14ஆயிரத்து 624 பெண்கள் உள்பட 1 கோடியே 14 லட்சத்து 88 ஆயிரத்த 358 வேட்பாளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு தேர்தலைச் சந்திக்கும் நாட்டிலேயே முதலாவது மாநிலம் கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவருமான எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சீதாராமையா, முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்), டி.எச். சங்கரமூர்த்தி (பா.ஜ.க.), எச்.விஸ்வநாத் (காங்கிரஸ்), எச்.டி.ரேவண்ணா (மதசார்பற்ற ஜனதா தளம்) ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.