எய்ம்ஸ் இயக்குநராக மீண்டும் பதவியேற்றார் வேணுகோபால்!
வியாழன், 8 மே 2008 (17:25 IST)
மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எய்ம்ஸ் இயக்குநராக மருத்துவர் வேணுகோபால் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
எய்ம்ஸ் இயக்குநர் பதவியில் உள்ளவர் 5 ஆண்டுகளுக்கோ அல்லது 65 வயது வரையோ மட்டுமே அப்பதவியில் நீடிப்பார் என்று நிர்ணயம் செய்யும் சட்டத் திருத்த வரைவு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசுத் தலைவராலும் கையெழுத்திடப்பட்டது.
இதையடுத்து, எய்ம்ஸ் இயக்குநர் பதவியில் இருந்த மருத்துவர் வேணுகோபாலை, அவருக்கு 65 வயதிற்கு மேலானதைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மத்திய அரசு பதவி நீக்கியது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
தற்போது 66 வயதாகும் மருத்துவர் வேணுகோபால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் எய்ம்ஸ் வளாகத்திற்கு வந்து எய்ம்ஸ் இயக்குநர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.
மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாசிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் கூடி நின்று மருத்துவர் வேணுகோபாலிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அவரின் வருகைக்காகக் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேச மறுத்த மருத்துவர் வேணுகோபால், தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் எய்ம்ஸ் வளர்ச்சிக்காகப் பணியாற்றப் போவதாகத் தெரிவிக்கும் அறிக்கை நகல்களை வினியோகித்தார்.
அதில், "எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் எய்ம்ஸ் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்ற உள்ளேன். இந்த நாட்டு மக்களுக்காகச் செயலாற்றிவரும் எய்ம்ஸ் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் விதிமுறைகளின்படி மருத்துவர் வேணுகோபால் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.