பூமியே கடவுள்தான்; ஒன்றும் செய்யக்கூடாதா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
செவ்வாய், 6 மே 2008 (20:40 IST)
"நாம் பூமித் தாயை வணங்குகிறோம். அதற்கு நாம் பூமியைத் தொட முடியாது என்று அர்த்தமா?" என்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.
கடந்த மே 1ஆம் தேதி துவங்கிய சேது சமுத்திரக் கால்வாய் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று நடந்தது.
இவ்வழக்கில் அரசிற்கு எதிராக வாதாடும் இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சொலி சொரப்ஜியை நோக்கிக் கேள்வி எழுப்பிய நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், "நாம் பூமியை வழிபடுகிறோம். அதற்கு நாம் பூமியைத் தொட முடியாது என்று அர்த்தமா? இமயமலையையும் நாம் வணங்குகிறோம். அதற்கு இமயமலையைத் தொட முடியாது என்று அர்த்தமா? விருந்தாவன், மதுராவில் உள்ள கோவர்தன மலைகளை நாம் வணங்குகிறோம். அதற்குக் கோவர்தன மலையில் ஒன்றும் செய்ய முடியாது என்று அர்த்தமா?" என்றார்.
இதற்கு பதிலளித்த மற்றொரு மூத்த வழக்கறிஞர் கே.பராசரன், "இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது மிகவும் கடினம். நீதிபதிகளால் கூட இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது" என்றார்.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாதாடிய மூத்த வழக்கறிஞர் சொலி சொரப்ஜி, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனது அல்லது அவளது விருப்பத்திற்கேற்ற மதத்தைப் பின்பற்றவும், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் சுதந்திரம் அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவை மீறும் வகையில், பெருமளவிலான மக்கள் தங்கள் நம்பிக்கையையும், மதத்தையும் பின்பற்றுவதைத் தடுக்கும் வகையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றார்.
ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதைக் காட்டுவதற்கு வரலாற்று ஆதாரமோ அல்லது அறிவியல் பூர்வமான ஆதாரமோ இல்லை என்ற சொரப்ஜி, இது, சிறிலங்காவிற்குச் செல்வதற்காக கடவுள் ராமரால் கட்டப்பட்டது ராமர் பாலம் அல்லது ஆதம் பாலம் என்ற ஒரு மதத்தின் கீழ் உள்ள இந்தியச் சமூகத்தின் ஒரு பெரும்பிரிவு மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்றார்.
ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரமோ அல்லது அறிவியல் ஆதாரமோ உள்ளதா என்கிற சர்ச்சைக்குள் நுழைவது இந்த நீதிமன்றத்தின் பணியல்ல என்றும் அவர் கூறினார்.
ஒழுக்கம், பொது நலம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழிபாட்டுச் சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்த முடியும் என்ற சொரப்ஜி, குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களின் வழிபாட்டு உரிமையில் அத்துமீறிய தலையீடு உருவாகுமானால், ஒரு வழிபாட்டுத் தலம் சேதப்படுத்தப்படவோ இடிக்கப்படவோ முடியாது என்றார்.
மேம்பாட்டுப் பணிகளின் வசதிக்காக, 25 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தில் 300 மீட்டர் மட்டும் உடைக்கப்பட முடியாதா என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ராமர் பாலத்தில் ஒரு முனை உடைந்தாலும் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்றார் சொரப்ஜி.
ராமர் பாலத்தை எந்த வகையிலும் சேதப்படுத்துவதற்குத் தடை விதித்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அரசிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் தமிழக அரசும் வாதிட்டன.
இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடர்ந்து நடக்கிறது.