முன்னாள் அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகினார்!
செவ்வாய், 6 மே 2008 (17:11 IST)
மத்திய அமைச்சரவையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் இணையமைச்சர் அகிலேஷ் தாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சித் தலைமையின் பாரபட்சமான நடவடிக்கைகள் தனக்கு அதிருப்தியளித்த காரணத்தால் இம்முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ் தாஸ், இன்று மாநிலங்களவை கூடியதும் எழுந்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரியிடம் சென்று தனது பதவிவிலகல் கடிதத்தைக் கொடுத்தார்.
மேலும், "காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அவர்.
இதன்பிறகு நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் தாஸ், தனது பதவிவிலகல் கடிதத்தை அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பிவிட்டதாகவும், இதனால் தான் மிகவும் நிம்மதி அடைந்துள்ளதாகவும் கூறினார்.
ராகுல் காந்திமீது பாய்ந்த அவர், "இளவரசைச் (ராகுல்) சுற்றிலும் அவருக்கு ஆமாம் போடுபவர்கள் நிறைய உள்ளனர். அவர்களுக்கு யாராவது மூலம் பிரச்சனை வந்தால், பிறகு அந்த நபர் வேதனைப்படுவார்" என்றார்.
தான் பதவிவிலகியதற்கும் ஆமாம் போடுபவர்கள்தான் காரணமாக இருக்கலாம் என்ற தாஸ், இது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் பானர்ஜி தாசின் மகனான அகிலேஷ் தாஸ், கடந்த மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு உருக்குத்துறை இணைய அமைச்சராக இருந்தார். அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக் காலமும் விரைவில் முடியவிருப்பது குறிப்பிடத்தக்கது.