அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 2 ஜூலை 2024 (11:21 IST)
ஆடி மாதத்தில்,  மூத்த குடிமக்களை அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி  ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் http://hrce.tn.gov.in விண்ணபிக்கலாம் அல்லது மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு தொடங்கும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் மக்கள் தாய்தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடத்தப்பட்ட ஆன்மிகப் பயணங்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்பெற்றனர்.
 
2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
 
சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், திருவொற்றியூர், அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,
தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில், அருள்மிகு வராகியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருகாவூர், அருள்மிகு கர்ப்பக ரட்சாம்பிகை திருக்கோயில், பட்டீஸ்வரம், அருள்மிகு துர்கையம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, அருள்மிகு மாரியம்மன், அங்காளம்மன் திருக்கோயில், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், சூலக்கல், அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், கோயமுத்தூர், அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருச்சி மண்டலத்தில் உறையூர், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், அருள்மிகு கமலவள்ளி நாச்சியார் திருக்கோயில், திருவானைக்காவல், அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு உஜ்ஜையினி மாகாளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், வண்டியூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மடப்புரம், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், அழகர்கோவில், அருள்மிகு ராக்காயியம்மன் திருக்கோயில், சோழவந்தான், அருள்மிகு ஜனகை மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், முப்பந்தல், அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், சுசீந்திரம், அருள்மிகு ஒன்னுவிட்ட நங்கையம்மன் திருக்கோயில், மண்டைக்காடு. அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், குழித்துறை, அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில் ஆகிய பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
 
திருக்கோயில்களுக்கு ஒரு ஆடி மாத அம்மன் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது 19.07.2024, 26.07.2024, 02.08.2024, 09.08.2024 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 17.07.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.
 
மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417 20754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422- 2244335, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம் என மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்