புஷ் கருத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!

செவ்வாய், 6 மே 2008 (09:29 IST)
உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு இந்தியர்களின் உணவுப் பழக்க முறைகள் அதிகரித்து வருவதே காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய கருத்து வளர்ந்த நாடுகளின் அராஜகப் போக்கையே காண்பிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வளர்ந்து வரும் நாடுகள் வறுமையில் இருக்கவும் தங்கள் நாடுகள் மட்டும் வளம் கொழிக்கவேண்டும் என்ற ஏகாதிபத்திய அராஜகத்தையே புஷ் கருத்து பிரதிபலிக்கிறது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

உலக நடைமுறைகளைப் பற்றிய புஷ்சின் அறியாமையை இந்த கருத்து வெளிப்படுத்தியுள்ளது, 80 ‌விழு‌க்காடு இந்தியர்கள் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவான வருவாய் உடையவர்கள் என்ற நிலைமை நீடித்து வருகையில் இந்தியர்களின் உணவு பழக்க வழக்கங்கள் அதிகரித்திருப்பதுதான் உலக உணவு பற்றாக்குறைக்கும், விலை உயர்விற்கும் காரணம் என்று கூறுவது மோசடியான ஒரு கருத்தாகும் என்றார்.

முன்னதாக கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், புஷ்சின் கருத்து பற்றி கூறுகையில், அதிபர் புஷ், காண்டலீசா ரைஸ் ஆகியோரது கூற்றுக்கள், ஊட்டச் சத்தற்ற உணவை உட்கொள்ளும் கோடிக்கணக்கான இந்திய மக்களை அவமானப்படுத்துவதாய் உள்ளது என்று கூறியுள்ளார்.

உணவு தானியப் பயிர்களை எரிபொருள் உற்பத்திக்காக பயன்படுத்தும் அமெரிக்க கொள்கையே உணவுப் பொருள் பற்றாக்குறைக்கும், எகிறும் விலைகளுக்கும் காரணம். இதனை புஷ் மூடி மறைக்கப்பார்க்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்