முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ஜூன் 10 க்குள் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!
சனி, 3 மே 2008 (16:58 IST)
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (எய்ம்ஸ்) நடத்தப்படும் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் ஜூன் 10 க்குள் நிறைவடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களின் பட்டியலை மத்திய அரசிடம் தாக்கல் செய்யுமாறு மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், பிஹார், தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய 6 மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது.
முன்னதாக மருத்துவர் அமித் குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கான முதல்கட்டக் கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முடித்துவிட வேண்டும். இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஏப்ரல் 20 ஆம் தேதி முடித்துவிட வேண்டும்.
முதல்கட்டக் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிந்த பிறகு இரண்டாவது கட்டக் கலந்தாய்வைத் துவக்க வேண்டும். இதை மே 9 ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும்.
ஆனால், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், பிஹார், தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களும் குறிப்பிட்ட தேதிகளில் முதல்கட்டக் கலந்தாய்வுப் பணிகளை நிறைவு செய்யவில்லை.
இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறைகின்றன.
எனவே, மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கருதி உரிய காலத்தில் கலந்தாய்வுப் பணிகளை நிறைவு செய்யுமாறு அரசிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.