உலகச் சந்தையை காரணம் காட்டுவது தேவையற்றது: இடதுசாரிகள்!
வெள்ளி, 2 மே 2008 (20:00 IST)
விலைவாசி உயர்விற்கு உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் காரணம் என்ற வாதம் தேவையற்றதென்றும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதென்றும் இடதுசாரிகள் குற்றம்சாற்றினர்.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், " சாதாரண மக்களால் வாங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள், உணவு தானியங்களுக்கு சலுகைகள் வழங்கும் பொது வினியோகத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இதன்மூலம், அவற்றை உலகளாவிய காரணங்களில் இருந்து பாதுகாக்க முடியும்" என்றார்.
"அரசு கடவுளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மழைக் கடவுளை எதிர்பார்க்கிறது. உலகளாவிய காரணங்கள் தப்பிப்பதற்குத்தான் கூறப்படுகிறது. அவற்றை அரசுதான் உருவாக்குகிறது" என்றார் அவர்.
பணவீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, "நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது, நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகப்பெரிய சாதனைகளை செய்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் பணவீக்கம்தான் அதிகரித்துள்ளது. இது அரசின் தோல்வியையே காட்டுகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தையும் பணவீக்கத்தையும் அரசு எப்படிச் சமநிலையில் எடுத்துச்செல்லப் போகிறது" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே நாடு முழுவதும் வருகிற 15 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதில், தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் மட்டும் போராட்டத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
ஊக வர்த்தகத்தில் 25 வகையான வேளாண் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிப்பதற்கும், உணவு தானியங்களைத் தனியார் பெருமளவில் கொள்முதல் செய்வதற்குத் தடை விதிப்பதற்கும் மறுப்பதன் மூலம், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மக்கள் நலனை மத்திய அரசு பலி கொடுக்கிறது என்று அக்கட்சி குற்றம்சாற்றியுள்ளது.