புதுச்சேரியில் ரோடியர் மில் தொழிலாளர்களின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பேருந்துகள் இயக்கப்படவில்லை. நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
அரசு அதிகாரிகளுக்கு வழங்குவது போல் மத்திய பஞ்சப்படி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரோடியர் மில் தொழிலாளர்கள் கடந்த 33 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்றும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இரண்டு பேர் கொண்ட குழு தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் இந்த அறிவிப்பை ரோடியர் மில் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இவர்களின் போராட்ட அழைப்புக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. நகரில் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. இதே போல் ஆட்டோக்கள், டெம்போக்கள் குறைவாகவே இயங்கியது. புதுசசேரி, தமிழக அரசு பேருந்துகள் சில பாதுகாப்புடன் ஓடியது.
ஆனால் அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டன. போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். நகர்பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடிக் கிடந்தது. நகரின் அனைத்து தெருக்களிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.