உள்நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தேவைப்பட்டால் அதிக அளவு சிமென்ட் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய தொழில் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் தெரிவித்தார்.
இதை புது டெல்லியில் இன்று ஃபிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டின் வளர்ச்சிக்காக அறிவு சார் சொத்துரிமை என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்ட அஸ்வின் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
சிமென்ட் விலை ஏற்றத்தை தடுக்க மத்திய அரசு ஏற்கனவே சிமென்ட் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஆனால் இதில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சிமென்ட் ஆலைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, உள்நாட்டின் தேவையை நிறைவு செய்ய, இறக்குமதி செய்யப்படும் சிமென்டின் அளவு மே மாதத்தில் இருந்து தினசரி 4 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி வரி செலுத்தாமல் சிமென்ட் இறக்குமதி செய்து கொள்ள கடந்த வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கிருந்து கடந்த வருடம் 1 லட்சத்து 30 ஆயிரம் டன் சிமென்ட் இறக்குமதி செய்யப்பட்டது.
இத்துடன் சிமென்ட் விலை உயராமல் இருக்கவும், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், சிமென்ட் விற்பனையாளர்கள் அதிகபட்ச இருப்பு வைத்துக் கொள்ளும் அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.