ஈரானில் இருந்து இயற்கை எரிவாயு: இந்தியா-பாக் ஒப்புதல்!
சனி, 26 ஏப்ரல் 2008 (14:00 IST)
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேற்றுமை முடிவுக்கு வந்தது.
இரு நாடுகளும் அடுத்த ஆண்டில் இருந்து குழாய் பாதை அமைக்கும் பணியை தொடங்குவது என முடிவு செய்தன. குழாய் பாதை அமைக்கும் பணி ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஈரானில் இருந்து இரு நாடுகளும் இயற்கை எரிவாயு பெறுவது என முடிவு செய்துள்ளன.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் குழாய் பாதையில் எரிவாயுவை கொண்டு வருவதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் கருத்து வேற்றுமை இருந்தது. இதனால் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்க குற்றம் சாட்டியது. இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையில் சர்வேதச அணுசக்தி முகமையில் அமெரிக்கா கொண்டு வந்த ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய் பாதை அமைக்கும் திட்டத்தில் பங்கேற்க கூடாது என அமெரிக்கா மறைமுகமாக நிர்பந்தம் செலுத்துவதால், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்குதாக முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினார்கள்.
இதற்கு ஏற்றார்போல் கடந்த ஒன்பது மாதங்களில் நடந்த ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை. அத்துடன் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா கூட்டத்தில் பங்கேற்பதை ரத்து செய்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்குவதை அறிந்த சீனா, ஈரான்-பாகிஸ்தான் குழாய் பாதை திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டியது.
அத்துடன் அமெரிக்க ஆதரவுடன் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் துர்க்மானிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இந்தியா வரை இயற்கை எரிவாயு கொண்டுவரும் குழாய் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி துர்க்மானிஸ்தானத்தில் இருந்து இயற்கை எரிவாயு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.
இந்த திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கி சென்ற வாரம் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள சென்ற பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா பாகிஸ்தானுக்கு சென்றார்.
இந்நிலையில், உலக சந்தையில் தினசரி பெட்ரோலிய கச்சா எண்ணை. இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்தியாவின் எரிசக்தி தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு இந்தியா மீண்டும் ஈரான் பாகிஸ்தான் இந்தியா எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டியது.
இந்தியா, பாகிஸ்தான் பெட்ரோலிய துறை அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில், இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை 2012 ம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவது என இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளும் இயற்கை எரிவாயு கொண்டு வருவதற்காக குழாய் அமைப்பது உட்பட கட்டுமான பணிகள், எரிவாயு போக்குவரத்து கட்டணம், எரிவாயு கட்டணம் ஆகியவைகளை இறுதி முடிவு செய்வதற்கு இரு நாடுகளும் இணைந்து குழு அமைப்பது என கொள்கை அளவில் முடிவு செய்தன.
எரிவாயு போக்குவரத்து கட்டணத்தையும், எரிவாயு கட்டணத்தையும், உலக அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளின் படி முடிவு செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மொத்த செலவு 750 கோடி டாலர். இதில் பாகிஸ்தான் மூன்று கோடி டாலர் வழஙகும்.
ஈரானில் இருந்து இயற்கை எரிவாயு குழாய் பாகிஸ்தானின் குவாதர், நவாப்ஷா பிராந்தியங்களின் வழியாக, இந்திய பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த திட்டத்தின் படி, தெற்கு ஈரானில் பராஸ் பகுதியில் இருந்து 2,775 கீலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பாதை அமைக்கப்படும்.
இந்த குழாய் பாதை வழியாக தினசரி ஈரான் 260 கோடி கன அடி இயற்கை எரிவாயு வழங்கும். இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலா 130 கோடி கன அடி இயற்கை எரிவாயு பகிர்ந்து கொள்ளும்.
இந்திய அமைச்சர் முரளி தியோராவும், பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அவர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும். இவை சில நாட்களிலோ அல்லது சில வாரங்களுக்குள் தீர்க்கப்படும். ஆனால் இரு நாடுகளும் சம்மதித்த பின் இறுதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று தெரிவித்தனர்.