டி.ஆர்.பாலு விவகாரத்தால் அமளி: மாநிலங்களவை தள்ளிவைப்பு!
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (18:52 IST)
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனது குடும்பத்தினரின் நிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயு பெற்ற விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை தள்ளிவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று இவ்விவகாரத்தை எழுப்பிய பா.ஜ.க. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத், பாலுவின் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதங்கள் தொடர்பாக பிரதமரே அவைக்கு நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று கோரினார்.
அப்போது, அவைத்தலைவர் இருக்கையில் இருந்த பேராசிரியர் குரியன் இப்பிரச்சனையை எழுப்ப அனுமதியளிக்க மறுத்தார்.
ஆனால், பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து முதலில் 12.30 மணி வரையும் பின்னர் மதியம் வரையும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அவை கூடியபோது எழுந்த பா.ஜ.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றும், அமைச்சர் டி.ஆர்.பாலுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் அவையின் வேறு எந்த அலுவல்களையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலை நீடித்ததால் அவை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.