தொழிலாளர் நலன்: இந்தியா- மலேசியா விரைவில் உடன்பாடு!
வியாழன், 24 ஏப்ரல் 2008 (16:46 IST)
மலேசியவாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலன் உடன்பாட்டு வரைவை இருநாடுகளும் இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"இந்தியா- மலேசியா இடையிலான தொழிலாளர் மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்தாவதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் இறுதிசெய்யப்பட்டு விட்டன" என்று மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அயல்நாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
திறமை மிகுந்த, பகுதித் திறமை வாய்ந்த, திறமையற்ற இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு மலுக்கு வந்தால், புதிதாக மலேசியா செல்லும் தொழிலாளர்களுடன் ஏற்கெனவே அங்கு பணியாற்றிவரும் தொழிலாளர்களும் பயன்பெற முடியும் என்றார் அவர்.
அதிகாரிகள் மட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் மூலம், தொழிலாளர் பிரச்சனைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும்.
மிகக்குறைவான கூலிக்காக கடுமையான பணியிடங்களில் பணியாற்றும்படி வற்புறுத்தப்படல், ஒப்பந்ததாரர்களால் ஏமாற்றப்படல் உள்ளிட்ட புகார்கள் மலேசியவாழ் இந்தியத் தொழிலாளர்களால் ஏராளமாகத் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பளிக்க இந்த உடன்பாடு மிக அவசியமானது.