விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் காரணமல்ல- அலுவாலியா!
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:02 IST)
விலை உயர்வுக்கும் முன்பேர சந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால நடவடிக்கையே, நீண்ட காலத்திற்கு தடை செய்யும் நோக்கம் இல்லை என்றும் மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
விலை உயர்வை கட்டுப்படுத்த பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் ஆகியவைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இன்று புது டெல்லியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த அலுவாலியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீண்ட காலத்திற்கு உணவு பொருட்களின் விலை உயர்வை க்டடுப்படுத்த ஏறறுமதிக்கு தடை விதிப்பது அரசின் நோக்கமில்லை என்று கருதுகின்றேன். நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று கருதுகின்றேன்.
இதற்கு முன் எப்போதும் கோதுமை, அரிசி விலைகள் இரு மடங்கு அதிகரித்ததில்லை. இது போன்ற சூழ்நிலையில் மற்ற நாடுகளும் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கும். நீண்டகால நோக்கில் விவசாய விளை பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்வதை நான் ஆதரிக்கவில்லை” என்று கூறினார்.
வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதால் விவசாய வளர்ச்சி குறையும் என்பதை மறுத்த அலுவாலியா, வளர்ச்சி என்பது உற்பத்தியை அதிகரிக்க எடுகக்ப்படும் பல்வேறு நடவடிக்கைகளை பொறுத்தே அமையும் என்றும், நுகர்வோரின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் உற்பத்தியாளர்கள் (விவசாயிகள் ) மற்றும் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கின்றோம் என்று பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், விலை உயர்வுக்கும் முன்பேர வர்த்தகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது சாதாரணமாக பொருளாதார நடவடிக்கையை கட்டுப்படுத்துவதாகும். விலை உயர்வோ அல்லது விலை உயராமல் இருப்பதற்கு எவ்விதத்திலும் முன்பேர சந்தை காரணமில்லை.
இதை பற்றி பரிசீலித்த அபிஜித் சென் குழு, முன்பேர சந்தையில் தடை செய்யப்பட்டுள்ள சில பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இதன் விலைகள் உலக அளவில் உயர்ந்துள்ளதே என்று கூறியுள்ளது.
முன்பேர சந்தையில் தடை செய்யப்படாத சில பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று அலுவாலியா கூறினார்.
இடதுசாரி கட்சிகளும், மற்ற சில கட்சிகளும் விலை உயர்வுக்கு காரணம் முன்பேர சந்தையே, இதை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில் முன்பேர சந்தையின் வர்த்தகத்திற்கும, விலை உயர்வுக்கும் தொடர்பில்லை என்று அலுவாலியா கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.