கில் பதவி விலக வேண்டும் : கில்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (17:36 IST)
இந்திய அணிக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு விரர்களைத் தேர்வு செய்த ஊழல் அம்பலமானதையடுத்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து கே.பி.எஸ். கில் பதவி விலக வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கோரியுள்ளார்.

“இந்திய ஹாக்கி சந்தித்துவரும் இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது குறித்து கில் பரிசீலிக்க வேண்டும். இந்திய ஹாக்கியை மேம்படுத்தும் முயற்சியில் மற்ற இந்தியர்கள் ஈடுபடுவதற்கு அவர் வழிவிட வேண்டும்” என்று எம்.எஸ். கில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில் என்ன நடைபெறுகிறது என்பதை தொலைக்காட்சியில் கண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ள எம்.எஸ். கில், உடனடியாக செயலர் பதவியில் இருந்து விலகுமாறு ஜோதிகுமரனை தான் கேட்டுக்கொண்டதாகவும், அவரும் பதவி விலகினார் என்றும் கூறியுள்ளார்.

“1994ஆம் ஆண்டு முதல் செயலராக இருந்துவரும் ஜோதிக்குமரன் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. சிலியில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் தோல்வியுற்றதால் துக்கமடைந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு, ஹாக்கித் தேர்வில் இருந்த நம்பிக்கையும் தற்போது சிதைந்துவிட்டத” என்று எம்.எஸ். கில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்