சரப்ஜித் சிங்கிற்கு பாகிஸ்தான் கருணை காட்டவேண்டும்: பிரணாப் வேண்டுகோள்!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (19:33 IST)
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக லாகூர் சிறையில் வாடும் சரப்ஜித்திற்கு பாகிஸ்தான் அரசு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வரும் மே 1ஆம் தேதி நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பிரணாப் முகர்ஜி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சட்டத்தின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், 1990ஆம் ஆண்டு முதல் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் வாடும் சரப்ஜித்திற்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்ட வேண்டும” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1990ஆம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று குற்றம்சாற்றப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த்து. தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏப்ரல் 1ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது. ஆனால், இந்திய தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்