முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள நளினியை தான் சந்தித்துப் பேசியது உண்மைதான் என்று பிரியங்கா (காந்தி) வதேரா உறுதி செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி வேலூர் சிறையில் தான் நளினியை சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ள பிரியங்கா, "எனது வாழ்க்கையில் வன்முறையுடன் அமைதி ஏற்படுத்திக்கொள்ள” நளினியை சந்தித்தாகக் கூறியுள்ளார்.
“தற்கொலைத் தாக்குதலுக்கு எனது தந்தை இலக்கு ஆக்கப்பட்டது ஏன் என்பதை அறிய விரும்பினேன்” என்று கூறியுள்ள பிரியங்கா, “கோபமும், வன்முறையும் என்னை ஆதிக்கம் செலுத்த நான் அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டதாகவும், நளினியும், பிரியங்காவும் சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் பேசியதாகவும் நளினியின் வழக்கறிஞர்களான துரைசாமியும், இளங்கோவனும் கூறியுள்ளனர்.
நளினியை பிரியங்கா சந்தித்தது உண்மையா என்பதை தெரியப்படுத்துமாறு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ் குமார் என்பவர், தகவலறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்தச் சந்திப்பு தொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.