ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்: பா.ஜ.க.!
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:35 IST)
ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவும் பதட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
"இந்த விவகாரத்தால் கர்நாடாகவிலோ, தமிழகத்திலோ வன்முறை ஏற்படாது என்று மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கான சரியான தீர்வை கண்டறிய வேண்டும்" என்று பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
கர்நாடக வன்முறை குறித்து அவர் கூறுகையில், "பா.ஜ.க. வன்முறையை ஆதரிக்காது. நிலைமையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பதாலும் இந்த நேரத்தில் முடிவு எடுப்பது மத்திய அரசுக்கு நெருக்குதலை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை ஏற்கனவே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.