சரப்ஜித் சிங்கை விடுவிக்க உரிய நடவடிக்கை: பிரதமர்!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:46 IST)
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
கடந்த 1991 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் லாகூர், முல்டான் நகரங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகள் தொடர்பாக சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதற்கு இந்தியர்கள் தரப்பில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, சரப்ஜித் சிங்கிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று இந்திய அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது தொடர்பாக பஞ்சாப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் இன்று பிரதமரை சந்தித்தனர்.
அப்போது, "மனிதாபமான அடிப்படையில் சரப்ஜித் சிங் விடுதலை செய்யப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்துள்ளது" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.