இந்தியத் திரைப்படங்களின் மீதான தடைகளை பாகிஸ்தான் அரசு நீக்குமா?
செவ்வாய், 25 மார்ச் 2008 (18:16 IST)
இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தடைகளை அந்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு நீக்கிவிடும் என்று இந்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலர் ஆஷா ஸ்வரூப் இன்று நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பையில் இன்று நடந்த விழா ஒன்றில் பேசிய ஸ்வரூப், பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடனான இருதரப்பு நல்லுறவில் ஒரு புதிய அத்தியாயம் துவங்க வழி பிறக்கும் என்றார்.
இதற்கு உதாரணமாக பாகிஸ்தான் திரைப்படமான 'குடா கே லியே' இந்தியாவில் திரையிடப்பட்டதையும், இந்தியத் திரைப்படமான 'தாரே ஜமீன் பார்' பாகிஸ்தானில் திரையிடப்பட உள்ளதையும் ஸ்வரூப் குறிப்பிட்டார்.
முன்னதாக இவ்விழாவில் பேசிய மூத்த திரைப்பட இயக்குநர் யாஷ் சோப்ரா, "இந்தியத் துணைக் கண்டத்தின் திரைப்படத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கவும், இந்திய-பாகிஸ்தான் பண்பாட்டு நல்லுறவில் ஒரு புதிய முன்னேற்றம் உண்டாகவும், இந்தியத் திரைப்படங்களின் மீதான தடைகளை பாகிஸ்தான் அரசு நீக்க வேண்டியது அவசியம்" என்றார்.