கேரளா: கண்ணணூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!
வியாழன், 13 மார்ச் 2008 (16:52 IST)
மார்க்சிஸ்ட் - ஆர்.எஸ்.எஸ். இடையே நடந்த மோதலில் 7 பேர் படுகொலை செய்யப்பட்ட மாவட்டமான கேரள மாநிலம் கண்ணணூர் மூழிக்கரையில் உள்ள குண்டுச்சிரபண்ட் என்னுமிடத்திலிருந்து இன்று நாட்டு வெடி குண்டுகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேடுதல் வேட்டையில் இன்று ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்குள்ள ஒரு பகுதியில் பிளாஸ்டிக் வாளியில் நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் வைத்து பூமியில் குழி தோண்டி மூடப்பட்டிருந்ததை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
அந்த பகுதியில் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று விலக்கப்பட்டது முதல் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருந்தபோதும் தலசேரி பகுதியில் அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணணூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.