மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறந்த பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார் என்று தொழில் துறையினரும், முதலீட்டு வங்கிகளும் பாராட்டியுள்ளன.
பட்ஜெட் பற்றி இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் சுனில் மித்தல் கூறுகையில், பட்ஜெட் எதிர்பார்த்த மாதிரியே உள்ளது. நிறுவன வரியை குறைக்காதது தவிர, மற்றபடி தொழில் துறையினரை பாதிக்கும் வகையில் வரிகள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
கோடக் மகேந்திரா வங்கியின் மேலாண்மை இயக்குநர் உதய் கோடக் கூறுகையில், நிறுவன வரிகளில் மாற்றமில்லை. பங்குச் சந்தை உட்பட சொத்துக்களின் குறுகிய கால இலாபத்தின் மீதான வரி ஐந்து விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குகளை குறுகிய காலத்தில் விற்பனை செய்யாமல் குறிப்பிட்ட காலம் வரை முதலீட்டாளர்கள் வைத்துக் கொள்வார்கள் என்று கூறினார்.
ஜின்டால் உருக்கு தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குநர் சஜ்ஜான் ஜின்டால் கூறுகையில், நாங்கள் நிதி அமைச்சர் நிறுவன வரியை குறைப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும், கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரும்பு தாது நீண்ட காலத்திற்கு கிடைக்கு அதன் மீது ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட வில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. அதே நேரத்தில் குரோம் தாது ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது ஆறுதல் அளிகக் கூடிய விஷயம். பொதுவாக இந்த பட்ஜெட்டில் திருப்தியும், ஏமாற்றமும் அளிக்க கூடிய வகையில் இருக்கிறது என்று தெரிவித்தார்.