பொருளாதார நிதிக் கொள்கைகளில் தலையிட வேண்டாம்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளை!
புதன், 27 பிப்ரவரி 2008 (15:37 IST)
அரசுகளின் பொருளாதாரம் மற்றும் நீதிக் கொள்கைகளில் தலையிட வேண்டாம் என்று நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அவ்வாறு தலையிட்டால் அது அரசுகளின் ஆட்சி அதிகார வரம்பிற்குள் அத்துமீறுவதாகும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சொத்து மதிப்பீடு தொடர்பாக ஆந்திர அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதாரக் கொள்கைகள் வல்லுநர்களால் திட்டமிடப்படுவதால், அவை சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் ஒழிய அதில் நீதிமன்றங்கள் தன்னிச்சையாகத் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
"நீதிமன்றம் என்பது நிர்வாகவியல் அல்லது பொருளாதார வல்லுநர்களால் கட்டப்பட்டதல்ல. இந்த விடயத்தில் நிபுணத்துவம் பெற்றதுமல்ல. தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பிறகு மிகக் கவனமாக கொள்கைகள் உருவாக்கப்படுகையில், நீதிமன்றங்கள் அதில் தலையிடுவது அரசுகளின் ஆட்சி அதிகாரத்தில் அத்துமீறலே ஆகும்" என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹெச்.கே.சேமா, மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட அமர்வு தனது உத்தரவில் கூறியுள்ளது.
முன்னதாக, ஆந்திர அரசு தனது கொள்கையின்படி இந்திய ஸ்டாம் சட்டத்தின் 47 ஏ பிரிவில் திருத்தம் செய்தது செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆந்திர அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையையும் தள்ளி வைத்தது.