ரயில்வே பட்ஜெட் வெறும் கண்துடைப்பு: பா.ஜ.க.!
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:25 IST)
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ள பா.ஜ.க., கட்டணக் குறைப்பு அறிவிப்புகள் வெறும் கண்துடைப்பு என்று கூறியுள்ளது.
இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பேச்சாளர் வி.கே.மல்கோத்ரா, "லாலு பிரசாத் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் கூச்சலிட்டபடி வெளிநடப்பு செய்தது, எல்லா மாநிலங்களின் நம்பிக்கையும் முறிந்து போனதையே காட்டுகிறது" என்றார்.
"காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி அவையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கூட இந்த பட்ஜெட்டினால் ஏமாற்றம் அடைந்ததுடன், இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்று விரும்பினர்" என்றார் அவர்.
கட்டணக் குறைப்பு அறிவிப்புகள் வெறும் கண்துடைப்பு என்று கூறிய மல்கோத்ரா, உணவுக் கட்டணம், முன்பதிவு, ரத்துக் கட்டணங்கள் ஆகியவற்றை உயர்த்துவதன் மூலம் மக்களின் சுமை அதிகரிக்கப்படும் என்றார்.
"மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். சாதாரணப் பயணிகள் ரயில்கள் தான் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்படுகின்றன. அதாவது, பழைய பெட்டிகளை வைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதெல்லாம் மேஜிக் போன்றது. என்ன நடக்கிறது என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் தற்போது கூடுதலாகச் செலவிட வேண்டும். இதற்கு முன்னாள் மக்களின் மீது இது போலச் சுமைகள் ஏற்றப்படவில்லை" என்றார் மல்கோத்ரா.