நாடாளுமன்றம் தள்ளி வைப்பு: நாளை ரயில்வே நிதிநிலை அறிக்கை!
திங்கள், 25 பிப்ரவரி 2008 (14:40 IST)
நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் துவக்க நாளான இன்று மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தள்ளி வைக்கப்பட்டன.
நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் துவக்க நாளான இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். பின்னர் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் வழக்கம்போலத் துவங்கின.
மக்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை வாசித்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அந்த உறுப்பினர்கள் தாங்கள் பதவி வகித்த போதும், பொது வாழ்க்கையிலும் புரிந்த சாதனைகளைச் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் திடீர் உடல்நலக் குறைவினால் மறைந்த சிவ்சேனா கட்சி உறுப்பினர் பிரகாஷ் பாரஞ்பி, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் அல்கா ராம், திரிலோக் சந்த், பிரதாப் சந்தர் சுந்தர், பி.கங்கா ரெட்டி, முகமது மக்ஃபூஸ் அலி கான், மன்ஃபூல் சிங் செளத்ரி ஆகியோருக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்திய பிறகு அவை தள்ளி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை தள்ளி வைப்பு!
இதேபோல, மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர் மோத்தியூர் ரஹ்மான் (ராஸ்ட்ரிய ஜனதா தளம்), முன்னாள் உறுப்பினர்கள் 4 பேர், எவரெஸ்ட்டில் ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரி, சமூக சேவகர் பாபா ஆம்தே ஆகியோருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவை தள்ளி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை வாசித்த அவைத் தலைவர் ஹமீது அன்சாரி, அந்த உறுப்பினர்கள் தாங்கள் பதவி வகித்த போதும், பொது வாழ்க்கையிலும் புரிந்த சாதனைகளைச் சுட்டிக்காட்டினார்.
மோத்தியூர் ரஹ்மான், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மோயிம் மோயோங் தியோரி, யெல்லா சேசி புஷானா ராவ், கோசவ் பிரசாத் சுக்லா, மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.கரண்ஜியா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சர் எட்மண்ட் ஹிலாரி பற்றிக் குறிப்பிட்ட ஹமீது அன்சாரி, எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதன் மூலம் ஹிலாரி புகழின் உச்சியை எட்டியதாகக் கூறினார்.
பாபா ஆம்தே பற்றிக் கூறுகையில், சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் இருந்த நூற்றுக்கணக்காக தியாகிகளுக்கும், சுதந்திர இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொழு நோயாளிகளுக்கும் தொண்டு செய்தவர் என்றார் ஹமீது அன்சாரி.
முன்னதாக, மாநிலங்களை துவங்குவதற்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அனைவரும் பெரிதும் எதிர்பாத்துவரும் ரயில்வே நிதிநிலை அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.