கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
கர்நாடகத்தில் ஓட்டப்படும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.
இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று காய்கறி வரத்து ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து கர்நாடகத்திற்கு சென்று பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் ஆளுநரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது ஆளுனர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.
கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பேருந்து, வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.