அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தக் கூடாது: இடதுசாரிகள் உறுதி!
புதன், 20 பிப்ரவரி 2008 (20:46 IST)
அமெரிக்காவின் அழுத்தம் கொடுக்கும் தந்திரத்திற்குக் கட்டுப்பட்டு அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை மே மாதத்திற்குள் முடித்து, ஒப்பந்தத்தின் வரைவை ஜூலை மாதத்திற்குள் அமெரிக்கக் காங்கிரசிற்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா விதித்துள்ள கெடுவிற்குப் பதிலடி கொடுத்துள்ள இடதுசாரிகள், "அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவில்லாத நிலையில், அதைச் செயல்படுத்த எந்தவிதமான அவசரமும் காட்ட வேண்டிய தேவையில்லை" என்று கூறியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறுகையில், "இந்த நாட்டில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் துவங்கிய நாளில் இருந்து, இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர அமெரிக்கர்களுக்கு வேறு வேலை இல்லை. எங்களுடைய கால அட்டவணைக்கு உட்பட்டு இப்பிரச்சனையை நாங்கள் தீர்த்துக் கொள்வோம். அமெரிக்காவின் கட்டளைகளுக்குச் செயல்பட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை" என்றார்.
அடுத்த மாதம் கோவையில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அணுசக்தி ஒப்பந்தம் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் அமெரிக்காவின் அணுசக்தி நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்படும். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காண்டலீசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் எத்தனைபேர் வலியுறுத்தினாலும், எங்கள் நிலையை மாற்றிக்கொள்ள முடியாது" என்றார்.