முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதியதொரு அணை கட்டப்படும் என்று கேரள சட்டப் பேரவையில் உரை நிகழ்த்திய அம்மாநில ஆளுநர் ஆர்.எல். பாட்டியா கூறியுள்ளார்!
கேரள சட்டப் பேரவையில் நிதிநிலை கூட்டத் தொடரின் துவக்க நாளான இன்று, பேரவையில் அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றிய ஆளுநர் ஆர்.எல். பாட்டியா, "பலவீனமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படக்கூடிய பிரச்சனைக்குத் தீர்வாக புதிய அணை கட்டப்படும்" என்று கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும், அதன் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும், அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறிவரும் கேரள அரசு, தற்பொழுது அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவதை ஆளுநர் உரையிலேயே கூறியுள்ளது.