பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்காது: பிரதமர்!
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (17:24 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை மக்களைப் பாதிக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
வடக்குத் திரிபுராவில் உள்ள உதய்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "மத்திய அரசின் திட்டங்கள் யாவும் ஏழைகள், பின்தங்கியவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. அதனால் தான், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட அதேநேரத்தில் மண்ணெண்ணெய் விலை உயர்த்தக்கடவில்லை" என்றார்.
"அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை சர்வதேசச் சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஏழைகளுக்கு நேரடியான பாதிப்பு ஏதும் அதிகமாக இருக்காது" என்றும் அவர் கூறினார்.
மேலும், குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் 80 விழுக்காடு வரை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.