விரைவில் கல்வி உரிமைச் சட்டம்: பிரதமர் உறுதி!
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (19:24 IST)
நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
இது குறித்துப் புது டெல்லியில் நடந்த எஃப்.ஐ.சி.சி.ஐ. கூட்டத்தில் பேசிய அவர், "ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அளிக்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவு ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்பது உறுதிசெய்யப்பட்டு, நிலையான வளர்ச்சி உருவாக்கப்படும்.
தொழில் கல்விக்கான தேசியத் திட்டத்தை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
நமது நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் கல்வி அறிவு பெறாமல், நவீனத் தொழில் பொருளாதார வளர்ச்சி என்பது இல்லை. ஆனால், தற்போது 70 விழுக்காட்டினர் தான் கல்வி பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் கல்விக்கு 8 விழுக்காட்டிற்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. ஆனால், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 19 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு, புதிதாக 30 மத்தியப் பல்கலைக்கழகங்கள், கல்வியால் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் 370 கல்லூரிகள், 6,000 உயர்தரப் பள்ளிகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இதுபோக, 8 புதிய தொழில் நுட்பக் கல்விக் கழகம் (ஐ.ஐ.டி.), 20 தகவல் தொழில் நுட்பக் கல்விக் கழகம் (ஐ.ஐ.ஐ.டி.), 7 நிர்வாகவியல் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.), 5 அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன " என்றார்.