இந்திய பெருங்கடல் வர்த்தகத்துக்கு அச்சுறுத்தல்: மன்மோகன் சிங்!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (20:00 IST)
இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த 30 நாடுகளின் கடற்படைத் தலைவர்கள் பங்கேற்ற முதலாவது இந்திய பெருங்கடல் கடற்படை கூட்டமைப்பின் கருத்தரங்கை இன்று டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தல்,திருட்டு, கொள்ளை சம்பவங்களால் வளர்ந்து வரும் கடல் வர்த்தகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த வகையான நடவடிக்கையால் மீனவர்களும், சுற்றுலா பயணிகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். இவற்றைத் தவிர ஆள் கடத்தலும் தற்போது இந்த மண்டலத்தில் பெருகி வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்து உள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில், நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், இந்தப் பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளின் கடற்படைகள் இடையே மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மும்பை, சிட்டகாங், பாங்காக், கொழும்பு, கிளாங் ஆகிய துறைமுகங்களில் சரக்குபெட்டககையாளும் திறன் இரண்டு இலக்கங்களாக அதிகரித்து உள்ளதன் மூலம் இந்த பகுதி வேகமாக வளர்ந்து வருவதுடன் தவிர்க்க இயலாத ஒரு பகுதியாக மாறி வருவதை உலகிற்கு வெளிப்படுத்தும் செய்தியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
அண்மைக் காலமாக உலகிள் மிகப்பெரிய வணிக கப்பல்களும், சரக்கு பெட்டகங்களை அதிக அளவில் எடுத்துச் செல்லும் கப்பல்களும் ஆசிய கண்டததினைச் சேர்ந்த நாடுகளின் கொடிகளை தாங்கி செல்வது அதிகரித்து உள்ளது. இது இம்மண்டலத்தில் வணிகம், பொருளாதார வளர்ச்சி வேகமாக விரிவடைந்த வருவதைக் காட்டுகிறது என்றும், அதேநேரத்தில் தீங்கின்மை, பாதுகாப்பு இந்த மண்டலத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடலின் தன்மையை நன்கு கடல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், கடல் வளங்களை தேவைக்குயேற்ற அளவில் பயன்படுத்துவதிலும், அவற்றை நிர்வகிப்பதிலும் அறிவியல் அறிவுக்கும், முடிவெடுக்கும் தன்மைக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள் போதுமான பொருளாதார வளர்ச்சியைப் பெற இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பயன்படுத்தும் போது, இந்தியா தனது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்த கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் அப்போது தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் கடலின் பாதுகாவலர்கள், கடல் பரப்பில் தற்போது உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் குறித்து தெளிவாக உணர்ந்து ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் கூடிய புதிய கடற்பாதுகாப்பு கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்சனைகளுக்கு ஒன்றுபட்டு தீர்வு காணவேண்டும் என்ற விருப்பமும், உங்களிடம் உள்ள தொழில் நுட்ப திறனும் நாம் அன்றாடம் எதிர்க் கொள்ளும் சவால்களை எதிர்க்கொள்ளத்தக்க வகையில் நடைமுறை சாத்தியமான புதிய வழிமுறைகளை நிச்சயம் தரும் என்று தாம் நம்பவுதாகவும் பிரதமர் தெரிவித்து உள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதி 2 கோடியே 80 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரந்துள்ளது. இப்பகுதியில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்ந்து வருவதுடன், உலகின் எரிசக்தியில் 40 விழுக்காடு ஆதாரங்கள் இந்தப் பகுதியில்தான் உள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். நம்மிடம் உள்ள இந்த அளப்பறிய வளங்களையும், அறிவையும் நம் அனைவரின் பொதுவான நன்மைக்கு பயன்படும் வகையில் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்ட உள்ளார்.