மார்க்சிஸ்ட் தலைவர் கொலை வழக்கு: பப்பு யாதவ் உட்பட 3 பேருக்கு ஆயுள்!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (13:33 IST)
பீகார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அஜித் சர்க்கார் உட்பட 3 பேரைச் சுட்டுக்கொன்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் ராஜன் (எ) பப்பு யாதவிற்கு ஆயுள் தண்டனை விதித்து பாட்னா மத்தியப் புலனாய்வுக் கழகச் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்து.
இவ்வழக்கில், பப்பு யாதவிற்கு உதவியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜன் திவாரி, அனில் யாதவ் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, தோட்டத் தொழிலாளர் பிரச்சனையில் ஏற்பட்ட பிரச்சனையில் அஜித் சர்க்காரை பப்பு யாதவ் சுட்டுக் கொன்றார். இது தொடர்பாக பப்பு, அனில், திவாரி, ஹரிஸ் சவுத்ரி, அமர் யாதவ் ஆகிய 5 பேரை மத்தியப் புலனாய்வுக் கழகம் கைது செய்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இவ்வழக்கு விசாரணை பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற ஆணைப்படி இருமுறை விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.