மும்பை கலவரம் : காங்கிரஸ் தூண்டுகிறது – சிவ் சேனா குற்றச்சாற்று!

புதன், 13 பிப்ரவரி 2008 (15:22 IST)
சிவ் சேனா செல்வாக்கைக் குறைக்கும் உள்நோக்கத்துடன் ராஜ் தாகரேயை தூண்டிவிட்டு மும்பையில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் அரசு மீது சிவ் சேனா குற்றம் சாற்றியுள்ளது.

மும்பை கலவரம் குறித்து தமிழ்.வெப்துனியா.காம் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்த சிவ் சேனா கட்சியின் தமிழக அமைப்பின் பொதுச் செயலாளர் குமார் ராஜா, ஆங்காங்கு சிறு சிறு குழுக்களாகச் சென்று கலவரத்தில் ஈடுபடும் ராஜ் தாக்ரேயின் தொண்டர்களை கைது செய்து மிகச் சுலபமாக இதனைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும், ஆனால் மராட்டிய காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மராட்டிய மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என்று 25-30 ஆண்டுகளுக்கு முன்னர் சிவ சேனை கூறிவந்ததைத்தானே இப்பொழுது மராட்டிய நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்ரே கூறிவருகிறார் என்று கேட்டதற்கு, அப்படிப்பட்ட கொள்கையை என்றோ சிவ் சேனா கைவிட்டுவிட்டதென்று கூறிய குமார் ராஜா, தன்னை அரசியல் ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ள இந்தி மக்களுக்கு எதிராக இப்பிரச்சனையை கையிலெடுத்துள்ளார் ராஜ் தாக்ரே என்றும், இதனை காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பின்னனியில் இருந்து தூண்டு விடுகிறது என்றும் கூறினார்.

ராஜ் தாக்ரேயை கைது செய்யாமல் காங்கிரஸ் கட்சி நாட்களைக் கடத்துவதே கலவரம் பரவ காரணமாகிறது என்றும் குமார் ராஜா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்