அமெரிக்காவுக்கு இடைநில்லா விமான சேவை : ஏர் இந்தியா!
புதன், 13 பிப்ரவரி 2008 (11:06 IST)
நமது நாட்டின் எல்லாப் பெருநகரங்களில் இருந்தும் அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடைநில்லா விமானப் போக்குவரத்தை அடுத்த ஒரு சில ஆண்டுகளில் துவக்க ஏர் இந்தியா திட்டமிட்டு வருவதாக அதன் வணிகத் தொடர்பு நிர்வாக இயக்குநர் ஜித்தேந்தர் பார்கவ் கூறியுள்ளார்.
ரூ.10,000 கோடி முதலீட்டிலான நாட்டின் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்கா -மும்பை இடையே இடைநில்லா விமான சேவையை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து டெல்லி -அமெரிக்கா இடையேயும் இடைநில்லா விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி- நியுயார்க் இடையிலான வழித்தடத்தில் இந்த சேவையை தொடங்கிவைத்த ஏர் இந்தியா நிறுவனத்தின் வணிகத் தொடர்பு நிர்வாக இயக்குநர் ஜித்தேந்தர் பார்கவ், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, விரைவில் பெங்களூரூ-சான் பிரான்சிஸ்கோ வழித்தடத்தில் இடைநில்லா விமான சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சென்னை, கொச்சி ஆகிய இடங்களில் இருந்தும் அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு இடைநில்லா விமான சேவை தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏர்-இந்தியாவுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும் வழித்தடங்களில் அமெரிக்கா-இந்திய வழித்தடம் தான் முக்கியமானது என்ற ஜித்தேந்தர் பார்கவ், எதிர்காலத்தில் இந்த வழித்தடத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் என்றார்.
நீண்டதூரம் செல்லத்தக்க வகையிலான 15 போயிங் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பார்கவ், வாஷிங்டன்,டெக்சாஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பிற நகரங்களுக்கும் விமான சேவையை தொடங்க உள்ளதாகவும் இரு வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த விமானங்கள் மூனிச் விமான நிலையத்தில் நின்று செல்லும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு இந்த வழித்தடத்தின் மூலம் ரூ.2,615.76 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகவும், தற்போது ரூ.3,300 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அளவு வருவாய் அதிகரித்ததுக்கு காரணம் கடந்த 5 ஆண்டுகளில் வாரத்திற்கு 10 விமான சேவைகள் இயக்கப்பட்ட நிலைமாறி தற்போது 38 விமான சேவையாக அதிகரித்து உள்ளதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள டெல்லி-நியுயார்க் தினசரி விமான சேவையின் மூலம் வாரத்திற்கு 38 விமான சேவைகளுடன் மொத்தம் 12,536 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நியுயார்க்(6,293), சிகாகோ(2,961), லாஸ் ஏஞ்சல்ஸ்(888), நெவார்க்(2,394) இருக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இடைநில்லா விமான சேவைகளுக்கு பி777-200 எல்.ஆர் விமானங்கள் பயன்படுத்தப்படும், இவற்றில் பயணிகளின் வசதிக்கேற்ற அனைத்து நவீன வசதிகளும் உள்ளது. இந்த விமானங்களின் முதல், சிறப்பு கட்டண வகுப்பு பயணிகளுக்கு சாய்வு படுக்கை வசதி கொண்ட இருக்கைகள், முதல் தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஜித்தேந்தர் பார்கவ் தெரிவித்துள்ளார்.