மக்களை ஏமாற்றிய ஐ.மு. அரசின் நிதிநிலை அறிக்கைகள்: இடதுசாரிகள் சாடல்!
வியாழன், 7 பிப்ரவரி 2008 (20:00 IST)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் மூலம் சாதாரண மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாக இடதுசாரிகள் குற்றம் சாற்றியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் ஆகியோர் பேசும்போது, நான்கு இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து ஒரு நிதி நிலை திட்ட மாதிரியை அரசிடம் வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் மூலம் தாங்கள் இதுவரை ஏமாற்றப்பட்டு உள்ளதாகவே இந்த நாட்டில் வாழும் சாதாரண மக்கள் நினைப்பதாக அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
மேலும் வரும் 2008 - 09 ஆம் நிதியாண்டுக்காண நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் கடன் தீர்வு ஆணையம் ஒன்றை உருவாக்குவதுடன், நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் இருந்து பெறப்படும் வருவாய்க்கு வரி விதிக்கும் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறைந்த பட்ச பொதுச் செயல் திட்டப் பணிகளை நிறைவு செய்யும் வகையில் வரும் 2008 - 09 நிதி ஆண்டுக்காண நிதிநிலை அறிக்கையில் ரூ.60,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினர். மேலும் சச்சார் குழு பரிந்துரையின்படி கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
தங்களுடன் நிதி நிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசு கலந்து பேசுவது கூட இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நிதியமைச்சர் சிதம்பரமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நிதி நிலை அறிக்கைத் தயாரிப்புத் தொடர்பாக எந்த வித கருத்தும் கேட்பதில்லை என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு மட்டும் தான் சிதம்பரம் ஆலோசனை நடத்துகிறார் என்றும் ஏ.பி.பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகள் கடன் தீர்வு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களைத் தள்ளபடி செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் பரிந்துரைத்தது படி வேளாண் கடன்களுக்கான வட்டி வீதத்தை 4 விழுக்காடாக குறைக்க வேண்டும்.
இதுத் தவிர முன்னொடி செலவினங்களுக்கான பட்டியலாக 13 செலவினங்கள் பட்டியல் ஒன்றைக் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், உணவு மானியம், சுகாதாரம், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு, அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமுக பாதுகாப்புத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது உள்ளிட்டவை இந்த 13 செலவினங்கள் பட்டியலில் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சனை, வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை, விலைவாசி உயர்வு ஆகியவை கடுமையாக சாதாரண மனிதனை பாதித்துக் கொண்டுள்ள இந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் எடுத்துத்தான் ஆக வேண்டியுள்ளதாக பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.