சிமி மீதான தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
வியாழன், 7 பிப்ரவரி 2008 (18:39 IST)
இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தின் (சிமி) தேசவிரோதச் செயல்களைக் கருத்தில் கொண்டு அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தேசவிரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்களில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளதன் காரணமாக சிமி இயக்கத்தைத் தடை செய்வதென்று இன்று நடந்த பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிமி இயக்கத்திற்கு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதால், கடந்த 2007 செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டை கோபுரம் தாக்கப்பட்டவுடன், செப்டம்பர் 27 ஆம் தேதி சிமி இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
அன்று முதல் 2003 செப்டம்பர் 27 ஆம் தேதி வரை, அந்த இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களின் மீது பயங்கரவாதம், சதிச்செயல்கள் தடுப்புச் சட்டம் (TADA), மராட்டிய கூட்டுச் சதித் தடுப்புச் சட்டம்(MCOCA), சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (1967) உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து 2003 அக்டோபர் 9 அன்று சிமி இயக்கத்தின் மீது இரண்டாவது முறையாக விதிக்கப்பட்ட தடை 2005 செப்டம்பர் 27 வரை நீடித்தது.
இறுதியாக கடந்த 2006 ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது முறையாகத் தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்காவது முறையாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் சிமி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மறைமுகமாக இயங்கி வருகின்றனர். தமிழகம், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த முக்கியக் குண்டு வெடிப்புகளில் சிமி இயக்கத்தினருக்குத் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.