மீண்டும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம்: பா.ஜ.க. கோரிக்கை!
வியாழன், 7 பிப்ரவரி 2008 (14:52 IST)
பயங்கரவாதிகளின் மீது மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மென்மையான போக்கைக் கடைபிடித்து வருவதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை(பொடா) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, "கர்நாடகாவில் லஷ்கர்-இ தொய்பா இயக்கத்தினர் முகாமிட்டிருந்ததும், அவர்களுக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன் தொடர்பிருந்ததும் அண்மையில் தெரியவந்தது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய அரசு அண்மையில் எச்சரித்தது.
அதற்கு முன்பு, ராகுல் காந்தியை கடத்துவதற்குச் சிலர் முயற்சிப்பதாகத் தகவல் வெளியானது. தற்போது, மாயாவதி கூட தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் மீது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருவதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். இதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்" என்றார்.
முன்னதாக, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை இந்த வாரம் சந்தித்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததும், இதைத் தொடர்ந்து 'சங்கல்ப யாத்திரையின்' சில நிகழ்ச்சிகளை பாஜ.க. ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.