நேபாளிகளிடமும் சிறுநீரக திருட்டு? இந்திய சிறப்பு காவல் படை விரைந்தது!

புதன், 6 பிப்ரவரி 2008 (15:02 IST)
அப்பாவி ஏழை நேபாளிகளிடம் இருந்தும் சிறுநீரக திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க இந்திய சிறப்பு காவல் படை நேபாளுக்கு விரைந்துள்ளது.

இந்தியாவை உலுக்கி வந்த சிறுநீரக திருட்டு சம்பவம் உலகையே கதிகலங்க வைக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழு ஆண்டுகளாக நடந்து வந்த சிறுநீரக திருட்டு கடந்த மாதம் ஹரியானா மாநிலத்தில் அம்பலமானது. அதனைதொடர்ந்து, தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான டாக்டர் அமித்குமாரை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் முடிக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலை வாங்கித் தருவதாகக்கூறி அப்பாவி நேபாளியர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து அவர்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுநீரக திருட்டு வியாபாரிகள் ரூ.1 லட்சம் பணம் தருவதாகவும் கூறி ‌சிறுநீரகத்தை அபகரித்துள்ளனர். தமாங் (29) என்பவரகாத்மாண்டுக்கு அருகில் உள்ள ஜோர்பதி நகர கம்பளி தொழிற்சாலையில் வேலை செய்துவ‌ந்தார். அங்கு குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு போதிய வருமானம் இல்லாததால் சிறுநீரகத்தை விற்க முன்வந்துள்ளார்.

அதன்படி, மொராங் மாநிலத்தை சேர்ந்த தீபக் பௌதேல் என்பவர் அவரை அழைத்து வந்து இந்திய-நேபாள எல்லைப்பகுதியில் இந்திய கும்பலிடம் ஒப்படைத்துள்ளார். தமாங் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அறையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பிறகு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஒரு சிறுநீரகத்தை எடுத்து டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், தமாங்கிற்கு அந்த மருத்துவமனை மற்றும் அப்பெண்ணின் பெயர் தெரியவில்லை. சிறுநீரகத்தை கொடுத்ததற்காக வியாபாரிகள் தமாங்கிற்கு ரூ.25 ஆயிரம் தந்துள்ளனர்.

"குற்றத்தை உணர்ந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சிறுநீரக வியாபாரிகளின் வலையில் விழுந்துவிட்டேன். இவ்வாறு ஜோர்பதி கம்பளி தொழிற்சாலையை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே தங்களது சிறுநீரகத்தை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கிராமப்பகுதிகளை சேர்ந்த படிக்காத ஏழைத் தொழிலாளர்கள்" என்று தமாங் கூறினார்.

இதுதவிர, நல்ல வேலை வாங்கித்தருவதாகவும் கூறி அதிகமான நேபாளிகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிறுநீரகம் திருடப்பட்டுள்ளது.

நக்சல் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் உமா பிரசாத் சதுர்வேதி கூறுகையில், "சிறுநீரக திருட்டு கும்பல் இரண்டு முறைகளில் அப்பாவிகளிடம் இருந்து சிறுநீரகத்தை திருடியுள்ளது. நேரடியாக ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பணம் தருவதாகக்கூறியும், இந்தியாவில் நல்ல வேலை வாங்கித்தருவதாகவும் கூறியும் அழைத்து சென்று சிறுநீரகத்தை அபகரித்துள்ளனர்.

வேலைக்கு வந்தவர்களுக்கு மாத்திரை கொடுத்து வயிற்று வலியை ஏற்படுத்தி, பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுநீரகத்தை திருடியுள்ளனர். நேபாளில் 7 ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக திருட்டு வியாபாரம் துவங்கியுள்ளது" என்றார்.

இந்த அதிர்ச்சி தகவல் குறித்து விசாரணை நடத்த இந்திய சிறப்பு காவல்துறை படை நேபாளுக்கு விரைந்துள்ளது. நேபாளில் நடந்த இந்த சிறுநீரக திருட்டு சம்பவங்களுக்கும் 48 நாடுகளுடன் தொடர்புள்ள டாக்டர் அமி‌த்குமார் கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. விசாரணைக்கு பிறகு மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்