'மோசமான காலம் முடிந்து விட்டது': பறவைக் காய்ச்சல் பற்றி மத்திய அரசு!
புதன், 6 பிப்ரவரி 2008 (11:50 IST)
மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், 'மோசமான காலம் முடிந்து விட்டது' என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதேநேரத்தில், அஸ்ஸாம் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
அஸ்ஸாமின் துப்ரி, கோக்ரஜர் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை அழிக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. துப்ரியில் 2,200 கோழிகளும், கோக்ரஜரில் 448 கோழிகளும் கொல்லப்பட்டுள்ளன. ஐந்து அதிவேக நடவடிக்கை குழு இந்த இரண்டு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய வேளாண் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து, அஸ்ஸாமில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளை அழிப்பது குறித்த தங்களது முடிவை தெரிவிக்கவுள்ள நிலையில், நிதிச்சுமை காரணமாக ஒரிசா தயக்கம் காட்டி வருவதாக கால்நடைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் ஏன் இன்னும் நோய் தாக்கப்பட்ட கோழிகள் அழிக்கும் பணி முடிவடையவில்லை என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, மத்திய கால்நடைத்துறை செயலர் பிரதீப் குமார் கூறுகையில், "2003 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அழிக்கப்பட வேண்டிய கோழிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது. அதுதான் எண்ணிக்கையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மோசமான காலம் முடிவுக்கு வந்துள்ளது. முரிஷிதாபாத், கூச் பேஹர் ஆகிய இரண்டு மாநிலங்களில் கோழிகள் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது" என்றார்.