தொகுதி மறுவரையறையை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு மேலும் 2 வாரம் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், பதில் அளிக்க ஏற்கெனவே 4 வார காலம் அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கோரிக்கை வைத்தார். நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுவரையறையை நடைமுறைப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அரசின் கோரிக்கையைப் பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், அரசு தரப்பில் பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் அளித்தார்.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், "இந்த ஆண்டில் பல்வேறு மாநில சட்டப் பேரவைகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குள் தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது உள்ள தொகுதிகள் 30 ஆண்டுகளுக்கு முன் வரையறை செய்யப்பட்டவை. அதன்படி தேர்தல் நடத்துவது மக்களின் உண்மையான எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்காது. இதனால், நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகள் மறுவரையறையை அமல்படுத்துவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
"தொகுதிகளை மறுவரையறை செய்து தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் மறுவரையறைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் அரசு இழுத்தடிக்கிறது" என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தாக்கீது அனுப்பியது. இதில், பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ஜனவரி 7ஆம் தேதி அரசு கோரியது. அப்போது 4 வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது கூடுதலாக 2 வாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர், அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.