பாதுகாப்பு வல்லமை, பண்பாட்டுப் பாரம்பரியத்தை பறைசாற்றிய அணி வகுப்பு!
சனி, 26 ஜனவரி 2008 (19:24 IST)
நமது நாட்டின் 59வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலை நகர் டெல்லியில் முப்படைகளின் வல்லமை, பாரத நாட்டின் பண்பாட்டுச் சிறப்பு ஆகியவற்றை மிக அற்புதமாக பறைசாற்றும் வண்ணமிகு அணிவகுப்பு சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் மிடுக்குடன் நடந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தி சென்றதுடன் துவங்கிய அணிவகுப்பில் போர் டாங்குகள், கவச வாகனங்கள், நீண்ட தூர இலக்குகளைத் தாக்கவல்ல பீரங்கிகள் ஆகியன அணி வகுத்து வந்தன.
விமானப்படை, கப்பற்படைகளில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆயுதங்களும் இன்றைய அணிவகுப்பில் இடம்பெற்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பலை அழிக்கவல்ல தனுஷ் ஏவுகணையாகும்.
அணிவகுப்பு மரியாதையை வணக்கத்துடன் ஏற்ற குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுடன், விழாவிற்கான அரசு விருந்தனராக வருகை
புரிந்துள்ள பிரஞ்சு குடியரசுத் தலைவர் நிக்கலாஸ் சர்க்கோசி அமர்ந்திருந்தார். துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் பல தலைவர்கள் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
அணிவகுப்பு துவங்குவதற்கு முன்னர், இந்தியா கேட்டிலில் உள்ள அமர் ஜவான் ஜோதி சதுக்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியும், முப்படைத் தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.