உ.பி. குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சுட்டுக் கொலை!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (12:10 IST)
உத்தரப் பிரதேசத் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவன் என்று சந்தேகிக்கப்படும் ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி(ஹியூஜி) தீவிரவாத இயக்கத் தலைவன் பஷீர் அகமது என்ற சாபா, ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவனான பஷிர் அகமது, பல ஆண்டுகளாக காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் முக்கிய கொலைக் குற்றவாளி ஆவான்.
காஷ்மீரில் 1992 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த பஷிர் அகமது, ஏராளமான இளைஞர்களுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்துள்ளான்.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம் லக்னோ, வாரணாசி உள்ளிட்ட 3 நகரங்களின் நீதிமன்றங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இவனுக்குத் தொடர்புள்ளது என்று கருதப்படுகிறது. இச்சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இதே போல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் இவனுக்குத் தொடர்புள்ளது. இதில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.