மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பரவிவரும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு 1,000 மருத்துவர்கள் தேவை என்பதால் அண்டை மாநிலங்களின் உதவியை அம்மாநில அரசு நாடியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இங்குள்ள 20 லட்சம் கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரை 7லட்சம் கோழிகள் மட்டும்தான் அழிக்கப்பட்டுள்ளது. 1.6 லட்சம் கோழிகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளன.
இந்நிலையில், பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். பறவைக் காய்ச்சலைத் தடுக்க 1,000 மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் அண்டை மாநிலங்களின் உதவியை மேற்கு வங்க அரசு நாடியுள்ளது.
இது பற்றி இந்திய கால்நடை மருத்துவ ஆணையர் மருத்துவர் பந்தோ பாத்யாயா கூறும்போது, "தற்போது பறவை காய்ச்சல் தாக்கிய கோழிகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது. பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக 7 மாநிலங்களில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 1,000 மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்." என்றார்.